Sunday, April 23, 2017

8. அப்பாவின் நண்பர்

"இந்த வருஷம் விளைச்சல் ரொம்பக் கம்மிங்க" என்றார் சரவணன், எங்கள் விளைநிலங்களின் குத்தகைக்காரர்.

"ஆமாம். அதுதான்  மழையே பெய்யலியே!...சரி. எவ்வளவு நெல்லு தர முடியும்  உன்னால?" என்றார் அப்பா.

"முப்பது மூட்டை கொடுத்துடறேன். அதுவே ரொம்பக் கஷ்டம்தான். எனக்கு எதுவும் மிஞ்சாது" என்றார் சரவணன் மென்று விழுங்கியபடியே.

அப்பா எதுவும் சொல்லவில்லை. சரவணன் சொன்னதை ஏற்றுக் கொண்டாரா அல்லது தனது அதிருப்தியைத் தன் மௌனத்தின் மூலம் காட்டிக் கொண்டாரா என்று எனக்குப் புரியவில்லை.

அறுவடை முடிந்ததும் முப்பது நெல் மூட்டைகளை வண்டியில் கொண்டு வந்து போட்டார் சரவணன்.

கடைசி மூட்டையை இறக்குமுன், அப்பா "அதை இறக்க வேண்டாம். அதை நீயே எடுத்துக்கிட்டுப் போயிடு" என்றார்.

"எதுக்குங்க?"

"உனக்கு ஒண்ணுமே மிஞ்சலேன்னு சொன்னியே! ஒரு மூட்டையாவது இருக்கட்டும்" என்றார் அப்பா.

அப்பா இரக்கமில்லாமல் நடந்து கொள்வதாக எனக்குப் பட்டது. ஒன்று, பேசாமல் மூட்டைகளை வாங்கி வைத்திருக்க வேண்டும். அல்லது ஐந்தாறு மூட்டைகளையாவது கொடுத்திருக்க வேண்டும். இப்படி ஒரே ஒரு மூட்டையைத் திருப்பிக் கொடுத்து சரவணனை அவமானப்படுத்துகிறாரே!

சரவணன் எதுவும் பேசாமல் ஒரு மூட்டையைத் திரும்ப எடுத்துக் கொண்டு போய் விட்டார்.

 இது இங்கே முடியவில்லை. இதற்குப் பிறகு,  ஒவ்வொரு மாதமும் ஒரு மூட்டை நெல்லை சரவணனுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார் அப்பா!

சில மாதங்கள் கழித்து,"ஏம்ப்பா இப்படி  மாசத்துக்கு ஒரு மூட்டை கொடுப்பதை விட அன்னிக்கே 12 மூட்டை  கொடுத்திருந்தால் அவருக்கு உபயோகமா இருந்திருக்குமே!" என்றேன் நான்.

"சரவணன் தனக்கு எதுவுமே மிஞ்சலேன்னு சொன்னதும் நான் ரொம்ப வருத்தப்பட்டேன். சரவணன் என்னிக்குமே பொய்  சொன்னதில்லை, நம்மளை ஏமாத்தினதும் இல்லை. அவன் நமக்குக் கொடுக்கற நெல்லில் ஒரு பகுதியை அவனுக்குக் கொடுக்கணும்னு அப்பவே தீர்மானிச்சுட்டேன். மொத்தத்தையும் அன்னிக்கே கொடுத்திருந்தா சாப்பாட்டுக்கு ஒண்ணு ரெண்டு மூட்டைகளை வச்சுக்கிட்டு மீதியை அப்பவே வித்திருப்பான். பின்னால அவனுக்கு சாப்பாட்டுக்கு நெல் இருந்திருக்காது. அன்னிக்கு அவனுக்கு நல்ல விலையும் கெடைச்சிருக்காது. அதனாலதான் மாசம் ஒரு மூட்டையாக கொடுத்தேன். அதோட அவன் வீட்டில நெல் இருந்தா அதில பாதியை எலிகள் தின்னுடும்!"

சரவணனிடம் அப்பாவுக்கு இருந்த பாசம் அப்போதுதான் எனக்கு முதலில் புரிந்தது.

ங்கள் கிராமத்தில் அந்த நாளில் இருந்த ஜாதி வழக்கப்படி சரவணன் எங்கள் வீட்டுக்குள் நுழைய முடியாது. அப்பா வாசல் திண்ணையில் உட்கார்ந்திருக்க, சரவணன் வீட்டு வாசலிலேயே நின்று பேசி விட்டுப் போவார். சில சமயம் வீட்டுக்குப் பின்பக்கம் வருவார். அப்போது அப்பாவும் பின்கட்டுக்கு வருவார். இருவரும் தோட்டத்தில் நின்றோ அமர்ந்தோ பேசிக்கொண்டிருப்பார்கள்.

பல சமயம் அம்மா சரவணனுக்குச் சாப்பிட ஏதாவது கொடுப்பார். சரவணன் தோட்டத்திலேயே மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிடுவார். அவர் வீட்டுக்குப் போகும்போது அம்மா பலகாரங்களை இலையில் சுற்றிப் பொட்டலம் கட்டி "வீட்டுக்காரிக்கும் குழந்தைக்குகளுக்கும் குடுங்க" என்று சொல்லிக் கொடுப்பார்.

ஒருமுறை அப்பாவிடம், "ஏம்ப்பா அவரை வீட்டுக்குள்ள உக்கார வச்சு சாப்பிடச் சொல்லலாமே!" என்று கேட்டேன். "எனக்கும் அதுதான் ஆசை" என்றார் அப்பா.

அந்த வயதில் அப்பா சொன்னதன் பொருள் எனக்கு விளங்கவில்லை. கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் அப்பாவுக்கும் சரவணன் மாமாவுக்கும் (மாமா என்று அவரை நான் வெளிப்படையாக அழைத்திருந்தால், ஊரில் எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்த்திருப்பார்கள்!) இருந்த நட்பும், ஜாதிக்கட்டுப்பாடுகள் ஏற்படுத்திய தடைகளும், அவற்றை மீறி அப்பா தன் நண்பர் மீது தான் வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்தியதும், பழைய வழக்கங்களைப் பெருமளவில் கடைப்பிடிக்கும் அம்மா அப்பாவின் மனதைப் புரிந்து கொண்டு நடந்து கொண்டதும் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய வந்தது.

நான் பள்ளிப்படிப்பை முடிக்கும் தருவாயில் அப்பா காலமாகி விட்டார். இறப்பதற்கு ஓரிரு மாதங்கள் முன்பிருந்தே அவர் நோய்வாய்ப் பட்டிருந்தார். அவரை இழந்து விடுவோமோ என்கிற பயம் எனக்கும் அம்மாவுக்கும் முன்பே ஏற்பட்டு விட்டது. ஆயினும் எங்கள் பயம் உண்மையானபோது ஏற்பட்ட அதிர்ச்சியும் துயரமும் எங்கள் இருவரையும் உலுக்கி விட்டன.

சரவணன் மாமாவின் நிலைதான் மிகவும் பரிதாபம். வீட்டுக்குள் வந்து அப்பாவைப் பார்க்க முடியவில்லை. பின்கட்டில் நின்று கழுத்தை நீட்டி உள்ளே எட்டிப்பார்த்து அப்பாவின் முகத்தைப் பார்த்து விட முடியுமா என்று அவர் தவித்த தவிப்பு!

ஒரு கட்டத்தில் அவரை உள்ளே வரச் சொல்லி விடலாமா என்று கூட அம்மா நினைத்தார். ஆனால் வீட்டுக்குள் நண்பர்கள், உறவினர்கள் என்று யாராவது இருந்து கொண்டே இருந்ததால் அது முடியவில்லை. அம்மா வரச் சொல்லியிருந்தாலும் சரவணன் மாமா உள்ளே வந்திருப்பாரா என்பது சந்தேகம்தான்!

ப்பா போய் இரண்டு மாதங்கள் ஒடி விட்டன. நானும் அம்மாவும் எப்படியோ இந்தத் துயரத்திலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வந்து விட்டோம். நான் பள்ளி இறுதித் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டு தேர்வையும் எழுதி விட்டேன்.

ஒருநாள் அம்மா என்னை 'சத்தம் போடாதே' என்று சைகை காட்டி விட்டுப் பின்கட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார். அவர் கை காட்டிய திசையில், தோட்டத்தில் ஒரு செடிக்கு அருகே சரவணன் தலை குனிந்து நின்று கொண்டிருந்தார்.

"என்ன?" என்றேன் அம்மாவிடம் புரியாமல்.

"அப்பாவை நினைத்து அவர் இன்னும் அழுது கொண்டிருக்கிறார் பார்!" என்றாள் அம்மா.

அப்போதுதான் கவனித்தேன். சரவணன் மாமா மௌனமாக, தான் அழுவது யாருக்கும் தெரியாமல், குலுங்கக் குலுங்க அழுது கொண்டிருந்தார். தரையில் சில கண்ணீர்த் துளிகள் விழுந்து தரை ஈரமாக இருப்பதைக் கூடப்  பார்க்க முடிந்தது.

அப்பாவின் மறைவை நானும் அம்மாவும் கூட ஏற்றுக் கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டோம். ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகும் கூட அப்பாவின் இறப்பைத் தாங்க முடியாமல் அழுது கொண்டிருக்கிறாரே, இவரைப் பற்றி என்ன சொல்ல?

அப்பாவுக்குப் பல நண்பர்கள் உண்டு. ஆயினும் 'அப்பாவின் நண்பர்' என்று சொன்னால் என் நினைவுக்கு வருபவர் சரவணன் மாமா மட்டும்தான்.

No comments:

Post a Comment