Sunday, February 4, 2018

9. சீனியர் சிடிஸன்

ப்பா எதையுமே வெளிப்படையாகப் பேசக் கூடியவர். தன் எல்லா அனுபவங்களையும் அம்மாவிடம் சொல்லி விடுவார். 

எனக்குக் கல்யாணம் ஆனால், என்னால் என் மனைவியிடம் இவ்வளவு வெளிப்படையாக இருக்க முடியுமா என்று தெரியவில்லை!

அம்மாவிடம் சொல்வது இருக்கட்டும். என்னிடமே சொல்கிறாரே! என்னதான் அப்பா தப்பாக எதுவும் செய்யவில்லை என்றாலும், இதுபோன்ற அனுபவங்களை, மனவியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு மகனிடம் சொல்ல ஒரு மனமுதிர்ச்சியும், தைரியமும் வேண்டும்!

ஒருநாள் பத்திரிகையில் ஒரு செய்தியைப் பார்த்து விட்டு அப்பாவிடம் "ஏம்ப்பா, இப்பல்லாம் நிறையக் கோவில்ல வயசானவங்கள்ளாம் வரிசையில ரொம்ப நேரம் நிற்காம சீக்கிரமே தரிசனம் பண்ண ஏற்பாடு பண்ணியிருக்காங்களாமே!" என்றேன்.

பக்கத்திலிருந்த அம்மா உடனே பெரிதாகச் சிரித்தார்.

"ஏம்மா சிரிக்கிறே?" என்றேன்.

"இந்த சீனியர் சிடிஸன் சலுகையை எல்லாம் உங்கப்பா நல்லா அனுபவிச்சிருக்காருடா!" என்றார் அம்மா.

"இதில சிரிக்கறதுக்கு என்ன இருக்கு?" என்றேன் நான்.

"ம்ம்ம். உங்கப்பாவே சொல்லுவாரு!" என்று அம்மா விஷமச் சிரிப்புடன் அப்பாவைப் பார்த்தார்.

"அது ஒண்ணுமில்ல. நான் ஒரு தடவை ஒரு டூரிஸ்ட் க்ரூப்பிலே ஒரு கோவிலுக்குப் போயிட்டு வந்தேன். பஸ்ஸில வந்தா தலை சுத்தும்னு சொல்லி உங்கம்மா வரல. அதைத்தான் உங்கம்மா சொல்லிக் காட்டறா!" என்றார் அப்பா.

"சமாளிக்காதீங்க! முழுக்கதையையும் சொல்லுங்க" என்றார் அம்மா விடாமல்.

"கதை என்ன வந்திருக்கு? ஒரு சின்ன விஷயம் நடந்தது. அதைத்தான் லக்ஷ்மி  சொல்லிக் காட்டறா" என்றார் அப்பா. (சில சமயம் என்னிடம் பேசும்போது கூட அப்பா அம்மாவை லக்ஷ்மி என்று பெயர் சொல்லிக் குறிப்பிடுவார். அது அவருடைய பழக்கம். அம்மாவின் பெயரை அடிக்கடி சொல்வதில் அத்தனை ஆனந்தம் அவருக்கு!) 
*                  *                     *                   *                    *                 *                   *                  *       
டூரிஸ்ட் பஸ்ஸில் பெரும்பாலானோர் தம்பதிகளாகத்தான் வந்தனர். என் போன்று தனியாக வந்தவர் சில பேர்தான். 

ஒரு பெண்மணியும் தனியாக வந்திருந்தாள். அவளுக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். ஆனால் நாற்பது வயதுதான் சொல்லலாம். அப்படி ஒரு இளமை. வயதுக்கு மீறிய அலங்காரம் வேறு!

பஸ்ஸில் என் இருக்கைக்கு இரண்டு வரிசைகள் தள்ளி எதிர்ப்புற வரிசையில் அமர்ந்திருந்தாள் அவள்.  பஸ் போகும்போது அவள் அதிகம் என் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தாள். (இல்லை, என் கண் அவள் பக்கம் அடிக்கடி தன் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்ததா?)

அவளைப் பார்த்தபோது, 'ராஜியும்தான் இருக்கிறாளே!  என்னை விட ஐந்து வயது சிறியவள். ஆனால் இன்னும் அதிக வயதானவளாகத்தான் தோன்றுவாள். இந்தப் பெண் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறாள்!' என்று ஒரு கணம் தோன்றியது.

உடனேயே, 'ஒரு மாதம் முன்புதான் திருக்கடையூர் போய் அறுபதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடி விட்டு வந்தேன். இந்த வயதில் ஏன் இந்தச் சிந்தனை?' என்று என்னையே கடிந்து கொண்டேன். ஆயினும் அந்தப் பெண் மீது என் பார்வை அடிக்கடி சென்று வருவதை என்னால் தடுக்க முடியவில்லை.
*                  *                     *                   *                    *                 *                   *                  *
ப்பா சொல்ல ஆரம்பித்தார்.

"கோவில்ல ஒரே கூட்டம். பெரிய கியூ இருந்தது. அறுபது வயதுக்கு மேல் ஆனவர்களுக்குத் தனி வரிசை. அதில போனா சீக்கிரம் தரிசனம் கிடைச்சுடும்னு சொன்னாங்க. ஆனா ஐடி ப்ரூஃப் இருக்கணுமாம். நல்ல வேளையா எங்கிட்ட பேன் கார்டு இருந்தது.

சீனியர் சிடிஸனோட இன்னொருத்தர் போகறதுக்கு அனுமதி உண்டுன்னு சொன்னாங்க. தம்பதியா வந்தவங்க சேர்ந்து போயிட்டாங்க.

ஒரு பொண்ணு - அம்பது வயசு இருக்கும் அவளுக்கு - தனியா வந்திருந்தா. அவ எங்கிட்ட வந்து "சார்! நீங்க தனியாத்தானே வந்திருக்கீங்க? உங்களோட சேந்து நானும் சீனியர் சிடிஸன் கியூவில வரலாமா?"ன்னு கேட்டா. நான் சரின்னேன்.

கோவிலுக்குள்ளே நுழையறபோது நாங்க ஒண்ணா போனோம். அப்புறம் ரெண்டு பேரும் தனித்தனியாப் போயிட்டோம். வீட்டுக்கு வந்ததும் இதை நான் லக்ஷ்மி கிட்ட சொன்னேன். அதைத்தான் நான் ஏதோ தப்புப் பண்ணிட்ட மாதிரி சொல்லிக் காட்டறா உங்கம்மா!" என்றார் அப்பா.
*                  *                     *                   *                    *                 *                   *                  *
 கோவிலுக்குப் போனதும் நான் சீனியர் சிடிஸன் கியூவில் நின்றேன். அப்போது அந்தப் பெண் என்னிடம் வந்து "சார்! சீனியர் சிடிஸனோட இன்னொருத்தர் போகலாமாமே! நான் உங்களோட வரட்டுமா?" என்றாள்.

எனக்கு இன்ப அதிர்ச்சி. நான் பார்த்து ரசித்த பெண், தானே வந்து என்னுடன் பேசியதும் இல்லாமல், என்னோடு சேர்ந்து வரிசையில் வர அனுமதி கேட்கிறாள்!

"வாங்களேன்!" என்றேன் மலர்ச்சியுடன்.

கோவில் மண்டப நுழைவாயிலில் ஒரு இரும்புக் கிராதிக் கதவின் முன் ஒரு காவலாளி  நின்று கொண்டு கொஞ்சம் கொஞ்சம் பேராக உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தான். நான் உள்ளே போனதும் அவன் கதவை மூடி விட்டான்.

அந்தப் பெண் கதவுக்கு வெளியே நிற்க நேர்ந்தது. "நான் அவரோட வந்திருக்கேன்!" என்றாள் அவள்.

"ஓ! வாங்க" என்று சொல்லி கதவைத் திறந்து அவளை உள்ளே விட்டவன், என்னைப் பார்த்து, "ஏன் சார் உங்க சம்சாரத்தைக் கூடவே அழைச்சுக்கிட்டு உள்ள வந்திருக்கக் கூடாது?" என்றான்.

நான் அவளைப் பார்த்து அசட்டுத்தனமாகச் சிரித்தேன்.

அவள் என்னைப் பார்த்த பார்வையில் கோபம் தெரிந்தது. "நான் அவர் சம்சாரம் இல்ல. அவர் கூட வந்திருக்கேன். அவ்வளவுதான்" என்று காவலாளியிடம் சொல்லி விட்டு என்னைத் தாண்டிக் கொண்டு முன்னே சென்று விட்டாள்.
*                  *                     *                   *                    *                 *                   *                  *
"அவ்வளவுதானா? நான் எதோ சுவாரஸ்யமா இருக்கும்னு நெனச்சேன்"  என்றேன் நான் ஏமாற்றத்துடன்.

"உங்கப்பாவோட அப்பாவித்தனத்தையும் அசட்டுத்தனத்தையும் பத்திப் பேசறதே சுவாரஸ்யமான விஷயம்தான்!" என்றாள் அம்மா.
*                  *                     *                   *                    *                 *                   *                  *
"அதற்குப் பிறகு அவள் என் கண்ணிலேயே படவில்லை. கோயிலுக்குள்ளேயே அவள் எங்கோ கூட்டத்தில் மறைந்து விட்டாள். பிறகு பஸ்ஸில் திரும்பியபோதும் அவள் என் கண்ணில் படவில்லை. நானே கூட என்னையறியாமல் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம்!

வீட்டுக்கு வந்ததும் ராஜியிடம் 'சீனியர் சிடிஸன் கியூவில் என்னோடு ஒரு பெண் வந்தாள்' என்று மட்டும் சொன்னேன். அதற்கே அவள் பெரிதாகச் சிரித்து "பெண்டாட்டி கூட வரலியேன்னுட்டு இன்னொரு பொண்ணைக் கூட அழைச்சுக்கிட்டுப் போனீங்களாக்கும்" என்று கிண்டல் செய்தாள்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு இது பற்றி என் மகனிடம் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம்! ராஜியிடம் சொன்னது போலவே பாலிஷாகச் சொல்லி முடித்து விட்டேன்.

வயதான காலத்தில் ஒரு வயதான பெண்ணைக் குறுகுறுவென்று பார்த்ததையும் அவள் வரிசையில் என்னுடன் வந்தது பற்றிக் கிளுகிளுப்பு அடைந்ததையும், காவலாளி அவளை என் சம்சாரம் என்று சொன்னபோது ஏற்பட்ட அற்ப சந்தோஷத்தை அசட்டுத்தனமாக வெளிக்காட்டி அந்தப் பெண்ணின் கோபத்துக்கு ஆளானதையும் விலாவாரியாக மனைவியிடமும் மகனிடமும் சொல்லிக் கொண்டு  இருக்க முடியுமா என்ன? 

(என் அனுபவத்தை உங்களிடம் சொல்லும்போது, என் மனைவி ராஜலட்சுமியை, நான் தனிமையில் அழைப்பது போல் ராஜி என்று குறிப்பிட்டதையும், என் மகனிடம் பேசும்போது என் மனைவியை லக்ஷ்மி என்று குறிப்பிட்டதையும் கவனித்திருப்பீர்களே!)